தேசப்பிதா மகாத்மா காந்தியின் சமாதியில் ஒபாமா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அங்கு அவர் மரக்கன்றும் நட்டார்.

காந்தி நினைவிடத்தில் ஒபாமா

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின்பேரில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மரபை மீறிச்சென்று வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சம்பிரதாய ரீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த வரவேற்பை தொடர்ந்து, ஒபாமா நேராக ராஜ்காட்டுக்கு சென்றார். அங்கு அவர் தேசப்பிதா மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் வணங்கி மரியாதை செலுத்தினார்.

காந்தி சமாதியில் அவர் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

பார்வையாளர் புத்தகத்தில் எழுதினார்

அங்கிருந்த வருகையாளர் புத்தகத்தில் ஒபாமா எழுதினார்.

அதில் அவர், ‘‘காந்தியின் ஆன்மா இன்னும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்துக்கு அது மாபெரும் கொடையாக இன்றும் அமைந்துள்ளது. இந்த உணர்வுடன், நாம் எல்லா நாடுகளிலும், அனைத்து மக்களுடனும் அன்புடனும், சமாதானத்துடனும் வாழ்வோம்’ என மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது, இன்றும் அப்படியே உயிர்ப்புடன் இருக்கிறது’’ என குறிப்பிட்டார்.

காந்தி நினைவிடத்தில் ஒபாமாவுக்கு, காந்தியின் ராட்டை மாதிரி வடிவம் ஒன்றை அதிகாரிகள் அன்பளிப்பாக அளித்தனர்.

காந்திமீது மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொள்கைகளில், போதனைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் பல்வேறு இடங்களில் பேசியபோது, மகாத்மா காந்தியை குறிப்பிட்டிருக்கிறார்.

2009–ம் ஆண்டு அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றபோது அவரிடம், ‘‘நீங்கள் ஒரு பிரபலத்துடன் இரவு விருந்து சாப்பிட வேண்டும் என்றால் யாருடன் சாப்பிட மிகவும் விரும்புவீர்கள்? உயிருடன் இருப்பவருடனா, மறைந்தவருடனா?’’ என கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர், ‘‘நான் மகாத்மா காந்தியுடன் இரவு விருந்து சாப்பிடத்தான் மிகவும் விருப்பம். அவரிடம் இருந்து நான் எவ்வளவோ உத்வேகம் பெற்றிருக்கிறேன். அவர் மார்ட்டின் லூதர் கிங்கையும் கவர்ந்துள்ளார். இந்தியாவில் அவர் அகிம்சைப் போராட்டத்தை நடத்தியிருக்காவிட்டால், மனித உரிமைக்காக அமெரிக்காவில் நீங்கள் அகிம்சை போராட்டத்தை பார்த்திருக்க முடியாது என அவர் கூறினார்’’ என்று குறிப்பிட்டார்.

Leave a Comment