நீங்கள் ஒரு பெரிய துணிக்கடையின் முதலாளி என நினைத்துக் கொள்ளுங்கள்! கோயம்புத்தூரில் தலைமையகம். தமிழகமெங்கும் கிளைகள். திருச்சியில் 10-வது புதிய கிளை திறக்கலாமா என்பதை உங்களின் மற்ற இயக்குநர்களுடன் கலந்தாலோசித்தால் எதை எதை ஆராய்வீர்கள்?

ஒரு திட்டத்தின் நன்மை தீமைகளை ஆராய்வதை மேலாண்மையில் SWOT Analysis என்கின்றனர். அதாவது அச்செயலின் வலிமைகள் (Strengths), பலவீனங்கள் (Weeknesses), அதனால் கிடைக்கும் மற்ற வாய்ப்புக்கள் (Opportunities), அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் எதிர்வரும் அச்சுறுத்தல்கள் (Threats) ஆகியவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்க வேண்டுமென்பார்கள்.

திருவள்ளுவரும் இக்கருத்தையே வலியறிதல் அதிகாரத்தில் வலியுறுத்துகிறார்! ஓர் செயலைத் தொடங்குமுன்பு அச்செயலின் வலிமையையும், அதனைச் செய்பவரின் வலிமையையும், அதை எதிர்ப்போரின் அதாவது அதற்கான இடையூறுகள், தடங்கல்களின் வலிமையையும், அத்துடன் செயலைத் தொடங்குபவர்க்கும் அதனை எதிர்ப்போர்க்கும் துணையாயிருப்போரின் வலிமையையும் நன்கு ஆராய்ந்த பின்னரே அச்செயலைத் தொடங்க வேண்டுமென்கிறார். இக்குறள் போர்தொடுக்க நினைக்கும் மன்னனுக்குச் சொல்லியது போல அமைந்தாலும் எந்தவொரு முக்கியமான செயலையும் தொடங்குபவர்க்கும் பொருந்தும்!

திருச்சியில் கடை திறக்கும் திட்டத்தின் வலிமை என்ன? நிறுவனத்திற்குள்ள பெயரும் புகழும், திருச்சியில் அதற்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பும் தானே! ஏற்கனவே திருச்சியில் உள்ள கடைகளும், அவர்களின் வாடிக்கையாளர்களிடம் அக்கடைகளுக்கு உள்ள செல்வாக்கு ஆகியவை வள்ளுவர் சொல்லும் எதிரியின் பலம், அதாவது செயலை மேற்கொள்பவரின் பலவீனம்! விற்பனையைப் பொறுத்தவரை போட்டியாளர் (Competitor) தானே எதிர்கொள்ளப்படவேண்டிய, வெற்றி கொள்ளப்படவேண்டிய எதிரி?

தமிழ்நாட்டின் மையத்தில் உள்ளதாலும் ஓர் சுற்றுலாத் தலமாக இருப்பதாலும் இங்கு வந்து போகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். சென்னை பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு நல்ல இடம் வாங்கி கட்டடம் கட்டுவதில் அல்லது வாடகைக்கு எடுப்பதில் செலவு குறையும் என்பவை யெல்லாம் நல்வாய்ப்புக்கள்!

சிக்கல்கள் என பார்த்தால் இங்கு பணப்புழக்கம் குறைவு. பெரும் பணக்காரார்கள் அதிகம் இல்லை! விமானநிலையம் இருப்பினும் துணி எடுப்பதற்காகவென்றே இங்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர் அதிகமில்லை! எதிர் காலத்தில் வேறு சில பெரிய நிறுவனங்கள் புதிதாகக் கடை திறக்க வாய்ப்புண்டு.

ஐயா, முடிவெடுத்தல் (Decision making) தான் மேலாண்மையின் முக்கியப் பணி! எல்லா முடிவுகளுமே, முடிவில் ஆமாம் அல்லது இல்லை என்பது தானே!! ஆனால் அதைத் தீர்மானிப்பதற்கு முன்பு தீர ஆராய வேண்டுமல்லவா? இதே வழியில் நாம் மேற்கொள்ளும் எந்தச் செயலையும் ஆராய முடியும்! உங்கள் மகளை எந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பது என்பதையும், இதய அறுவை சிகிச்சையை எந்த மருத்துவமனையில் செய்வது என்பதையும் கூட இவ்வாறு ஆராயலாம்! குறளைக் கேட்போமா?

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்

Leave a Comment