இடஒதுக்கீட்டை இழக்க தயாராகிறார்களா தேவேந்திர குல வேளாளர்கள்? – கல்வியாளர்கள், அரசியல், சமூகப் பிரமுகர்கள் கருத்து :

 

‘எவ்வளவோ பாரம்பரிய பெருமையும், கல்வித்திறமையும் இருந்தாலும்கூட எஸ்.சி. என்று எங்களை இழிவாக அழைக்கிறார்கள். இந்த இழிநிலை மாற இடஒதுக்கீட்டையும் கூட இழக்கத் தயாராக இருக்கிறோம்’என்று மதுரையில் தேவேந்திரகுல வேளாளர்கள் அறிவித்துள்ளது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். இதில் பேசிய அறக்கட்டளை தலைவர் தங்கராஜ், “தேவேந்திர சமுதாயத்தினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கிடையாது. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல, பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களை கட்டியவர்கள். இவ்வளவு பாரம்பரியமிக்க எங்கள் சமுதாயத்தை 1935-ல் இங்கிலாந்து அரசு தவறாகப் பட்டியல் இனமென்று அறிவித்துவிட்டது. எங்களுக்கு எஸ்சி என்ற அவப்பெயரும் வேண்டாம், அதனால் கிடைக்கிற இடஒதுக்கீடும் வேண்டாம்”என்றார். இந்த கோரிக்கையை ஆதரித்து அமித்ஷா, குருமூர்த்தி ஆகியோரும் பேசினர்.

இது பட்டியலின மக்கள் மத்தியில், குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரிக்கை பற்றி அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்.

எம்.கிருஷ்ணசாமி (சமூக ஆர்வலர்):

இந்தியாவில் எஸ்.சி.க்கு மட்டுமல்ல பி.சி., எம்.பி.சி. உள்ளிட்ட பிற பட்டியலில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், அவர்களைப் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை.

எங்களை மட்டும் ‘எஸ்.சி. கோட் டாவில் வேலைக்கு வந்தவன்’என்று இழிவாகப் பேசுகிறார்கள். பி.சி. கோட்டாவில் வந்தவர்களை மெரிட்டில் வந்தவர்களைப்போல பார்ப்பதும், எங்களைப் போன்றவர்களை இழிவுபடுத்துவதும் தான் சமூகநீதியா? தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளைவிட, அடைகிற அவமானங்களும், இழப்புகளும் தான் அதிகம். இன்னொரு 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டால், இடஒதுக்கீட்டின் தேவையின்றியே எங்களால் சாதிக்க முடியும். இக்கருத்தை ஓங்கி ஒலிக்கும் அளவுக்கு தேவேந்திர குலத்தவர்களிடையே ஒற்றுமையில்லை. என்றாலும் கூட, மதுரையில் நடந்த நிகழ்வு ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

கே.பி.மாரிக்குமார் (ஸ்பார்க் அகடமி நிறுவனர்):

என்னுடைய அகடமியில் கள்ளர் முதல் பள்ளர் வரை பல ஜாதியைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள். வி.ஏ.ஓ. முதல் குரூப்-2 வரை பல போட்டித் தேர்வுகளில், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோட்டாவைத் தாண்டி பொதுப்பிரிவிலும் அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்.

அதேபோல எஸ்.சி. கோட்டாவுக்கான கட் ஆப் மார்க்கானது, எம்.பி.சி. கோட்டாவுக்கான மதிப்பெண்ணைவிட அதிகம் உள்ளது. காரணம், எஸ்.சி. கோட்டாவில் உள்ள மாணவர்கள் படிப்பிலும், பொது அறிவிலும் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள். சட்டப்படிப்பில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட காரணம், அதில் மிக அதிகமாக தாழ்த்தப்பட்டோரே தேர்ச்சி பெற்றது தான் என்பது ஊரறிந்த ரகசியம்.

தமிழகத்தில் எந்த ஜாதியினரும் தங்களை பிசி என்றோ, எம்பிசி என்றோ அழைப்பதை ஏற்பதில்லை. ஆனால், பாரம்பரியமிக்க தேவேந்திரகுல வேளாளர்கள் எஸ்.சி. என்றும், தலித் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த இழிவு நீங்க வேண்டும் என்பதற்காக, இடஒதுக்கீட்டைகூட இழக்கத் தயாராக இருக்கிறோம்.

செந்தில் மள்ளர் (மள்ளர் மீட்பு கழகம்):

மதுரை மாநாட்டு கோரிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் கோரிக்கை கிடையாது, ஒட்டுமொத்த சமூக சிந்தனையாளர்களின் கோரிக்கை. இக்கோரிக்கைக்காக சாத்தூரில் வருகிற 29-ம் தேதி நாங்கள் மாநாடு நடத்துகிறோம்.

நாங்கள் எஸ்சி இல்லை என்று 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்துகிறோம். எங்களை உடனடியாக தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குங்கள். எம்பிசி, பிசியிலோ, அல்லது தனிப்பட்டியலிலோ சேருங்கள். எஸ்சி என்றால், பொதுத்துறை வங்கிகள் கூட அதிக கடன் வழங்க தயங்குகின்றன.

எஸ்.சி. என்ற இழி பெயரால், எங்களால் தொழில் நடத்த முடியவில்லை. அரசியல் நடத்த முடியவில்லை. கிறிஸ்தவராக, முஸ்லிமாக மதம் மாறினாலும், அவலங்கள் தொடர்கிறது.

ஜான் பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்):

தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் உட்பிரிவுகள் அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்கிறேன். ஆனால், இடஒதுக்கீடே தேவையில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இந்த மாநாட்டை நடத்தியவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்று அறிகிறேன். இடஒதுக்கீடு இல்லை என்றால், அவர்கள் பெரிய படிப்புகளை படித்திருக்க முடியுமா?.

மருத்துவர் எம்.காளிராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக):

தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக் கோருவது, முற்றிலும் தவறான அணுகுமுறை.

இடஒதுக்கீடு இருந்ததால்தான் தாழ்த்த ப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நான், மருத்துவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக முடிந்தது. இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால், கிராமப்புற, ஏழை தேவேந்திரகுல மக்களின் குழந்தைகள் யாரும் மருத்துவராக, ஐஏஎஸ் அதிகாரியாக, அரசு ஊழியராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வர முடியாமல் போய்விடும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தங்கராஜ், ஆர்.எஸ்.எஸ்.காரர். தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து, தமிழக அரசின் உதவியின்றி மத்திய அரசால் நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முயன்றால் நான் சார்ந்துள்ள அதிமுகவும், அதை கடுமையாக எதிர்க்கும்.

ச.தங்கவேலு (மாநிலங்களவை உறுப்பினர், திமுக):

சமுதாயப் பிரச்சினை பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. இப்பிரச்சினையில் திமுக என்ன முடிவெடுக்கிறதோ அது தான் என்னுடைய நிலைப்பாடும்.


ஏரின்றி அமையாது உலகு: மண்ணையும் மக்களையும் அறியாத குளிர் அறைக் கோமான்கள்

இந்தியாவின் இறையாண்மை வேளாண்மையில் உள்ளது. வேளாண்மையின் இறையாண்மை விதைகளில் உள்ளது, விதைகளின் இறையாண்மை உழவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.

ஆனால், அந்த விதைகளைக் கைப் பற்றும் வேட்டையைப் பன்னாட்டு நிறுவனங்கள் விரைவுபடுத்துகின்றன. நமது நாட்டின் பல்லாயிரமாண்டு வள ஆதாரமான விதைகளை மரபீனி மாற்றம் மூலம் கொள்ளையிட வருகின்றன சில நிறுவனங்கள். அரசின் சில ஆதரவு அமைப்புகளேகூட மரபீனி மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தாலும், சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘மரபீனி மாற்ற விதைகள் வேண்டும்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதற்கு ஒத்தூதும் வகையில் வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங் ‘இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மரபீனி மாற்றப் பயிர்கள் முதன்மையானவை' என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

முன்னுக்குப் பின் முரண்

அது மட்டுமல்ல மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பி.டி. பருத்தி விளைச்சலால் உழவர்களின் வருமானம் கட்டுக் கடங்காது உயர்ந்துவிட்டதாம். அட ஆண்டவனே, இந்தியாவில் நடக்கும் உழவர்களின் தற்கொலையில் மகாராஷ்டிரம் தானேய்யா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வகையில் முன்னாள் அமைச்சர் சரத் பவார்கூடத் தேவலை போல் தெரிகிறதே.

ஆக, மத்திய அமைச்சர்களின் மேதாவிலாசம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த விதை உரிமையையும் ஒருசில நிறுவனங்களின் கைகளில் கொடுத்துவிட்டு, நமது அரசுத் துறைகள் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்களோ, என்னவோ?

என்ன வழி?

பருத்தி உழவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் பருத்தி விலை வீழ்ச்சி என்பதோடு, அதை வாங்குவதற்கு யாருமில்லை என்பதும் முக்கியக் காரணம். பருத்தியை அப்படியே இருப்பு வைக்க முடியாது, அதைக் கொட்டை நீக்கினால் இருப்பு வைக்கலாம். இதற்குப் பருத்தியிலிருந்து கொட்டையைப் பிரிக்கும் ஜின்னிங் ஆலைகளை ஆங்காங்கே நிறுவினால் போதும். இதற்கான முதலீடு மிகமிகக் குறைவு. சில ஆயிரம் ரூபாயே போதும். ஊருக்கு ஒன்றாக இதை நிறுவினால், உழவர் தற்கொலைகளை ஓரளவு தடுத்திருக்க முடியும்.

அதேபோல, பால் என்ற அருமையான பொருள் இன்றைக்கு வீதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கான காரணம் உற்பத்திப் பெருக்கம் மட்டுமல்ல, அதை முறையாகச் சந்தைப்படுத்தும் திறன் இல்லை என்பதே. இந்தியாவில் குழந்தைகளுக்கான சத்துப் பற்றாக் குறை ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம். அப்படியானால் இந்த அருமையான, சத்துமிக்க பால் நமது குழந்தைகளிடம் அல்லவா கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா? பரவல்மயப்படுத்தப்பட்ட ஒரு விநியோக முறை, இந்தச் சிக்கலை மிக எளிதாகத் தீர்த்துவிடும்.

கிராமங்கள் தெரியாது

இந்தத் திசைவழியும் தீர்மானிப்பும் ஏன் நமது குளிரறைக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரவில்லை? ஏனென்றால் இவர்களில் பலர் கிராமங்களை மறந்தும்கூட எட்டிப்பார்க்காதவர்கள். அரசு அலுவலர்கள் தரும் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு, மேசை முன் உட்கார்ந்து மட்டுமே தீர்மானிக் கின்றனர். பெரிய பதவியில் உள்ள ‘அதிகாரிகள்' முன்பதிவு செய்யாத ரயில் பயணங்களிலோ, பேருந்துகளிலோ பயணித்ததே கிடையாது. இவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், திறப்பு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளின் நடனங்கள் போன்ற கேளிக்கை நிகழ்வுகள் தவிர, உண்மையைக் கண்டறியும் சூழல் இருப்பதே கிடையாது. எனவே, இவர்களுடைய திட்டங்களும் அப்படித்தான் இருக்கும்.

விரல் விட்டு எண்ணக்கூடிய துடிப்புள்ள சில மாவட்ட ஆட்சியர்கள், மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருந்ததால் பல நல்ல காரியங்களை ஆற்ற முடிந்ததைச் சமீபக் காலத்தில் நேரடியாகப் பார்த்திருக்கிறோம். எனவே, மக்களின் உண்மை நிலையைக் கண்டறிய, பழைய பிரித்தானிய ஆட்சி அணுகுமுறை பயனற்றது.

மாற்றம் வேண்டும்

நம்முடைய மன்னர்களைப் பற்றி படிக்கும்போதுகூட, மாறுவேடத்தில் சென்று மக்களின் கருத்தை அறிந்தவர்களைக் காண முடிகிறது. எனவே, ஓராண்டு போனாலும், வரும் ஆண்டுகளில் உண்மை நிலையைக் கண்டறிந்து நாட்டின் அடிப்படை ஆதாரமான வேளாண்மையைக் காக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு முனைய வேண்டும். மோடிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் உழவர்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் சிறுபான்மையினர். அவர் களுடைய மொழியிலேயே சொல்ல வேண்டு மானால், ‘பெரும்பான்மையினர் வாழ இனிமேலாவது வழிகாட்டுங்கள்'.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர்
மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்


இடஒதுக்கீடு என்பது பள்ளருக்கான சலுகையா?


ஓ !!! என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? 

சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. 

அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 

வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. 

ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? 

முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு ( பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால் ) மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. 

இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சிந்திக்க முடியுமா?
http://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu