*தமிழையும் தமிழனையும் அண்டை மாநிலத்தவர்/நாட்டவர் ஏன் வெறுக்கிறார்கள் என்று தெரியுமா?

உளவியல் உண்மை இதோ.!

தெலுங்கு, 
கன்னடம் ,
மலையாளம் 
இவர்கள் தங்கள் மொழியின் மீது காதல் கொண்டு அந்த மொழியின் ஆதி வரலாற்றை ஆராயும் போது கிடைக்கும் விடை

#தமிழ் 
#தமிழ். 
#தமிழ்… வருகிறது.!

இதை அறிந்ததும் நாம் பெருமையாக கொண்டாடிய #தாய்மொழியின் #தாய்  #தமிழ்…. என்பதை இவர்களால் பொருத்துகொள்ள முடியவில்லை

இவர்களின் மொழி வரலாறு வெரும் 
1000ம் ஆண்டுகள் கூட பழைமை சிறப்புடைய மொழி கிடையாது 
நம் தாய்மொழியை எந்த வகையில் ஆராய்ந்தாலும் விடை என்னவோ தமிழ் தமிழ் தமிழ்  
என்று வந்து நிற்பதால் இவர்களுக்கு அடையாளம் 
என்ற ஒன்று இல்லை என்பதால் தமிழ் மீது அளவில்லா வெருப்பு உண்டாகிறது…

அடுத்து வட நாட்டவர் 
சமஸ்கிரதம்,
இந்தி இவர்களும்  தங்கள் சமஸ்கிரத்தை உலக தொல் மொழியாக அறிவித்துவிடலாம் என்று கிளம்பும் போது சமஸ்கிரதத்துக்கு முன் தமிழ் வந்து நிற்பது இவர்களுக்கு தடையாகிவிட்டது 
போதாதற்க்கு பல எழுத்துகள் தமிழ் பிராமியில் இருந்து
திருடப்பட்டது என்று தெரியவர தமிழ் மீது தீராத வெறுப்புணர்வு உண்டானது
போதாததற்கு சிந்து சமவெளி நாகரிகத்திலும் தமிழனே வாழ்ந்தான் என்று சில தகவல்கள் வர வெறுப்புணர்வு மேலும் கூடியது…

சரி நம் மொழிதான் தமிழில் இருந்து களவாடபட்டது நம்முடைய நிலத்தை ஆண்ட வரலாறாவது நம்மை சிறப்பிக்கிறதா என்று ஆராய்ந்தால்  விடை என்று வந்து நிற்பது முந்தய ஆட்சி  
சேர/சோழ/ பாண்டியர்கள்.!

அப்படியென்றால் மொழியும் நமதில்லை மண்வரலாறும் நமதில்லை என்ற உண்மையே தமிழ் மற்றும் தமிழர் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு உளவியல் காரணம்…!

தமிழா நீ இன உணர்வு கொள்…!*

 

செல்வந்தரான விஜய் மல்லையாவிற்கு ஒரு நியாயம், ஏழை விவசாயிக்கு ஒரு நியாயமா?

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளரும் மதுபான ஆலை அதிபருமான விஜய் மல்லையா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயும், தனியார் வங்கிகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளார்.

 


 

அதன்படி, வாராக்கடன் விவகாரத்தில் மத்திய ரிசர்வ்வங்கி, பொதுத்துறை வங்கிகளுக்கு காலக்கெடு விதித்து, கடனை வசூலிக்குமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கவும் அவரைக்கைது செய்யவும் கடன் மீட்பு ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது.

மேலும், விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமல் தடுக்க, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், விஜய் மல்லையா மார்ச் 2ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளதாகவும், மல்லையா தற்போது இங்கிலாந்தில் இருப்பதாகவும் தெயவந்துள்ளது.

தற்போது, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மல்லையா, "தான் எங்கும் தப்பிச் சென்று தலைமறைவாகவில்லை என்றும், தனது வியாபார நிமித்தமாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாமல், ஹாயா வெளிநாட்டில் வலம் வருகிறார் ஒரு தொழிலதிபர்.


 

ஆனால், தஞ்சாவூரைச் சேர்ந்த பாலன் என்ற ஒரு சாதாரன விவசாயி தான் வாங்கிய டிராக்டருக்கான கடனை கட்டவில்லை என்று காவல்துறையினரை விட்டு கடுமையாக அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இழுத்துச் வெல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்கின்றன.

அப்படி என்றால் இந்த நாட்டில் பணக்காரர்கள் எவ்வளவு அன்போடும், பரிவோடும் பார்க்கப்படுகிறார்கள் என்பதும், ஏழைகள் எவ்வளவு கடுமையாக நடத்தப்படுகின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் நலம் என்ற சொல்லப்படுவது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது என்பதை அறிவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர முடிகின்றது.

இந்த சம்பவத்தில் யார் மீது கோபப்படுவது, நமது நாட்டின் அரசியல் வாதிகளின் மீதா? அல்லது நாட்டின் பெருவாரியான சொத்துக்களை கையில் வைத்துக் கொண்டு அரசையும், சட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளும் மல்லையாவைப் போன்ற முதலாளிகள் மீதா? அல்லது, எதைப்பற்றியும் அக்கறையின்றி எல்லா நிகழ்வுகளையும் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அப்பாவித்தனமாக பொதுமக்களின் மனநிலையையா? இல்லை எல்லாவற்றையும் மேம்போக்காகவும், குறுகிய பார்வையுனும் பார்க்கும் அறிவாளிகள் மீதா?…

 


திமுக வேட்பாளர் பட்டியல் – ஓர் அலசல்

வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தேர்தல் அறிக்கைகள், கூட்டணிகள், தொகுதி ஒதுக்கீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
 


 

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் வெளியிட்டார். திமுக போட்டியிடவுள்ள 173 தொகுதிகளுக்குமான மொத்த வேட்பாளர்களை ஒரே பட்டியலில் அறிவித்துள்ளார்.

முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41, மனிதநேய மக்கள் கட்சிக்கு 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு 4, மக்கள் தேமுதிக 3, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1, சமூக சமத்துவப்படை கட்சிக்கு 1, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு 1 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

 

பெண் வேட்பாளர்கள்:

மொத்தமுள்ள 173 வேட்பாளர்களில் 19 பேர் பெண்கள். கடந்த 2011 தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது.

வாய்ப்பு இல்லை:

கடந்த 2011 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 119 பேரில் 50 பேருக்கு வாய்ப்பு தரவில்லை. அதேபோல, 25 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், கடந்த 2011 தேர்தலில் வென்ற 23 எம்எல்ஏக்களில் புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர்கள் கே.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை

வாரிசுகள்:

சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆ.ராஜேந்திரன், என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, சுப.தங்கவேலனின் மகன் சுப.த.திவாகரன், பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகன் பி.டி.ஆர்.பி. தியாகராஜன், மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து ஆகியோருக்கு 

மீண்டும் வாய்ப்பு:

மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளிட்ட 18 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அன்பழகன், ஆற்காடு வீராசாமி இல்லை:

திமுகவின் பொதுச்செயலாளார் க.அன்பழகன் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்பழகன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சீருடையுடன் 'மது போதை': பள்ளி மாணவர் நீக்கமும் நிஜத்தில் 'மயங்கி'யவர்களும்!

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன.27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது வெறும் 'சிங்கிள் காலம்' செய்தி அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டதைச் சொல்லும் செய்தி.

அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட, போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால், அவரால் எழ முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் நேற்று நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியபோது, "மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்" என்றார்.

இந்த நடவடிக்கை சரிதானா?

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சரியானதுதானா? மாணவனுக்கு தண்டனை அளிப்பது நியாயமா? என்பது இங்கே விவாதத்துக்குரியது.

மாணவர்கள் இனி இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், ஒட்டுமொத்த மாணவ சமூகமும் திருந்த வேண்டும், கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே மாணவனுக்கு இந்தத் தண்டனையை அளித்திருப்பது பொருத்தமற்றது.

16 வயது மாணவர் ஒருவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுத் தந்தவர் யார்? எங்கிருந்து அந்த மது கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? அந்த மதுவை மாணவனுக்கு வழங்கியது யார்? மது வாங்கிய இடம் எதற்கு அருகில் இருந்தது? மது விற்பனைக்கான அங்கீகாரத்தை வழங்கியது யார்? மது வாங்குவதற்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில், அதில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த மாணவனை மது அருந்தத் தூண்டிய குற்றவாளிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த மாணவர் திமிரெடுத்து தவறு செய்ததற்கு அரசாங்கத்தையும், டாஸ்மாக்கையும், சூழலையும் எப்படி குறை சொல்ல முடியும்? மாணவர்கள்தான் இந்தச் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள் என்று ஆவேசத்துடன் கவுன்டர் கொடுக்கத் துடிக்கும் கருத்து கந்தசாமியா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்!

பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது. அப்படி என்றால், அந்த மாணவர் வழி தவறிய பாதையில் நடப்பதற்குக் காரணமாக இருந்தது யார்?

மாணவர் ''நான் தப்பான வழியில்தான் நடப்பேன். அப்போதுதான் இந்த உலகம் என்னை உற்றுக் கவனிக்கும்'' என்று நினைத்தா செயல்பட்டிருப்பார்? இல்லை ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போதையில் மயங்கி விழுந்திருப்பாரா? கொஞ்சம் நிதானமாக ரிலாக்ஸாக முடிந்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஆசுவாசமான மனநிலையில் யோசித்துப் பாருங்கள்.

பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் எங்கே இருந்து தொடங்குகிறது?

பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும் உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது பெற்றோர்களும், உறவினர்களும்தான். பலர் தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதைப் பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சில தருணங்களில் அதை சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்ட குறை, விட்ட குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது.

முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல், சமூக விரோதி, ஒழுக்கம் கெட்டவன் என்று பல்வேறு பட்டங்கள்.

இப்படிக் கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள்.

வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி சீர்குலைந்து போய்விடுகிறார்கள்.

புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை:

தமிழகத்தின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் (15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்) என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பருவம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான காலகட்டம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் நலனில் யாரும் அக்கறை காட்டுவதில்லை.

மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் அதை செய்யத் தவறிவிடுகின்றனர்.

உலக அளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் மது உள்ளிட்ட போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சம். மொத்தமாக 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா. சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருளால் சமூகம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 12 – 25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இப்படி தவறான பாதையில் மாணவர்கள் செல்லக் காரணமானவர்கள் யார்?

பெற்றோர்கள், பள்ளியின் சூழல், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்தவர், மது விற்பனைக்கு அனுமதி தந்த அரசு என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இதில் சிலரோ அல்லது பலரோ முக்கியக் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மாணவனை தண்டிப்பது ஏன்? இது குறித்து நம் வாசகர்களே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

என்ன சொல்கிறார்கள் நம் 'தி இந்து' ஆன்லைன் வாசகர்கள்?

* ''எல்லாம் சரியா போச்சா? கவுன்சலிங் கொடுத்து நல்ல பையனா மாற்ற முயற்சி செய்து இருக்க வேண்டும். முட்டாள்தனமான முடிவு'' என்கிறார் ஹெரிடேஜ் ஹெல்த் நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜேம்ஸ் ராபின்சன்.

* ''கொஞ்சம் ஓவரா போயிருச்சு… இதுக்கெல்லாம் தண்டனையா? மதுவை ஒழிக்க வழி உள்ளதா பாருங்கள். இல்லாவிட்டால் எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். பாவம் மாணவனின் கல்வி பாதிக்கக் கூடாது. சிறிய அபராதம் விதித்து மாணவனை மீண்டும் கல்வி பயில அனுமதியுங்கள்'' என்கிறார் கந்தசாமி எனும் வாசகர்.

* ''நமது குற்றவியல் நடைமுறைச்சட்டம் சொல்வது என்ன? குற்றம் செய்தவர்களை விட குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கே தண்டனை என்றுதானே சொல்கிறது. இதில் மட்டும் ஏன் எய்தவன் இருக்க அம்புக்கு ஏன் தண்டனை?'' என்று கேள்வி எழுப்புகிறார் தங்கவேல் சாமி.

* ''பள்ளி மாணவனுக்கு சாராயம் விற்ற சாராயக்கடை விற்பனையாளரான அந்த தெய்வத்திற்கு பணி உயர்வு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தவறு நடந்த இடத்தை நய்யாண்டியுடன் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறார் மகேந்திரன் ராமசாமி.

* ''பள்ளியை விட்டு நீக்குவதால், அந்தப் பையனை இன்னும் சமூகத்தில் இருந்து ஒதுக்கத்தான் செய்கிறோம், அவனுடைய வெட்கவுணர்வையும் பயத்தையும் ஒட்டுமொத்தமாக உடைப்பதன் மூலம் ஒன்று அவன் மிகப் புரிதல் உள்ளவனாக ஆகலாம், அல்லது ஒட்டுமொத்தமாக சமூகத்தால் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டாவதற்கான வாய்ப்புகளைத் தான் சமூகம் தயாராகக் கையில் திணிக்கின்றது! முதலில் நான் cool-ஆனப் பையன் அல்லது பெண் எனும் முட்டாள்தனமான விடயங்களிலிருந்து சிறுவர்களை வெளியில் கொண்டுவருவது மாதிரியான மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டியது முக்கியம்'' என்கிறார் ஈஸ்வர்.

* ''இந்த சம்பவத்தை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தால்தான் தமிழக பள்ளி மாணவர்களையும் ஏழை எளிய பெண்களின் மாங்கல்யத்தையும் காக்க முடியும். உயர் நீதிமன்றம் முன்வருமா?'' என்கிறார்கார்மேக பாண்டி.

* ''முட்டாள் நிர்வாகம். மாணவர் மது அருந்தியது அவனுடைய தவறு மட்டுமல்ல. அதற்கு காரணமான அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அதிக பணம் தரும் பெற்றோருக்கும் தண்டனை வேண்டும். அரசாங்கமும் திருந்தவேண்டும். மேலும் மாணவனின் நலன் இங்கு முக்கியம். அவனுக்கு மேலும் ஒரு வைப்பு தர வேண்டும். நம் நாட்டில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் மாணவர் கூட சீக்கிரம் வெளியில் வரும்போது குடித்ததற்காக பள்ளியில் இருந்து அணிப்பியது தவறு'' என்கிறார் ராமன்.

* 'அதிமுக மற்றும் திமுகவின் சாதனை' என்று ஜே.எம்.எஸ். என்ற வாசகர் குத்திக் காட்டியிருக்கிறார்.

ஆண்… இனிய இல்லத்தின் தூண். குடும்பத்தை வழிநடத்தும் ஆணிவேர். ஆணிவேர் நன்றாக இருக்கும் வரை, குடும்பமும் நன்றாக இருக்கும். ஆனால், ஆணாக தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, அவனை சிதைத்து ஒழுக்கம் கெட்டவன் என்ற முத்திரை குத்திவிட்டால் அவன் வருங்காலம் என்ன ஆகும்?

ஆசிரியர், ஐஏஎஸ், இன்ஜினீயர் என்று அவன் காணும் கனவுக்கு நாம் கொள்ளி வைத்துவிடுவது எந்த விதத்தில் ஏற்புடையது?

இப்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பண்பாட்டுக் கல்வி முறை மிகவும் அவசியம். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கோபதாபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் சிறு வயதில் இருந்தே நாம் போதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பருவத்தை அடைந்தவுடன், வாழ்க்கை முறையை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இனியாவது குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஆளுமைமிக்க மாணவர்களை வளர்த்தெடுப்போம்


 

இடஒதுக்கீடு என்பது சலுகையா?
————————————————————————————————–
ஓ !!! என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு [பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால்] மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சித்திக்க முடியுமா?
http://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu
  .

 

"நிதிப் பட்டினி'யில் உணவுப் பாதுகாப்பு!

–ஆர்.எஸ். நாராயணன்

 

 

மக்களைப் பசியின்றி, பட்டினி போடாமல் வாழ வைக்கும் "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துடன், "உங்கள் பணம் உங்கள் கையில்' சேரவும் வேண்டும். பொது வினியோகமும், நிபந்தனையுடன் கூடிய பணப்பரிமாற்றமும் நிகழ வேண்டும்.

ஆகவே பிரதமர் மன்மோகன் சிங் உணவுத்துறைச் செயலாளரை அழைத்து, உணவு மானியத்தை அடிப்படையாக வைத்து, அதற்கான நிதி மதிப்பீட்டைத் தயாரித்து, நிதியமைச்சரைக் கலந்து பேசும்படி கடந்த மாதம் கட்டளையிட்டார்.

பொது விநியோக அமைப்பில் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் கொள்முதல், சேமிப்பு பின்னர் வழங்கல் வரை கருவூலத்திற்கு ஏற்படும் செலவுகள், பின்னர் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் உணவு மானியம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, "உங்கள் பணம் உங்கள் கையில்' சேர்வதற்கான நிபந்தனை பணப்பரிமாற்றம் பயனாளிகளுக்கு நிர்ணயம் செய்யும் பொறுப்பு உணவு வழங்கல் துறைக்கும் நிதித்துறைக்கும் உள்ளது; அதற்கான மதிப்பீட்டைச் செய்யும் பொறுப்பு "விவசாய விலை நிர்ணயக் குழு'விடம் விடப்பட்டது.

வறுமைக் கோட்டுக்கு மேலும் கீழும் வாழும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கவனிக்கப்பட்டது.

விவசாய விலைக் கமிஷன் (ஏ.பி.சி.) இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 1. உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிட்டால் வழங்க வேண்டிய பணம் – அதாவது மூன்றாண்டுகளுக்கு 7,00,000 கோடி ரூபாய்கள் (127 பில்லியன் டாலர்).

2.  உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாமல் நிறுத்திவைத்தால் 3,00,000 (55 பில்லியன் டாலர்) கோடி ரூபாய் அளவில் அதை குறைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேற்படி விவரங்களுடன் உணவுத்துறைச் செயலர், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பார்த்து விவரத்தைச் சொன்னபோது, ""ஏகாதசி விரதந்தான்'' என்று பதில் கூறினார்.

ஏகாதசி விரதம் போதாது. சஷ்டி விரதமும் இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறிய உணவுத்துறைச் செயலர் வழங்கிய மாற்று யோசனைதான் ""நிதிப்பட்டினி மசோதா!''

ஆங்கிலத்தில் என்.எஃப்.எஸ்.பி. என்பது "நேஷனல் ஃபுட் செக்யூரிட்டி பில்'. அதே என்.எஃப்.எஸ்.பி.யை "நேஷனல் பைனான்ஷியல் ஸ்டார்வேஷன் பில்'லாகப் பொருள்கொள்ள வேண்டியதுதான் என்று கூறி செயலர் நகைத்தபோது, "இதெல்லாம் ஆகிற காரியமா' என்று சிதம்பரம் திகைத்தாராம். பின்னர், ஆகக் கூடியதை யோசித்தாராம்.

தேசிய உணவுப் பாதுகாப்பு கீழ்க்கண்ட முறையில் செயல்படுத்தப்படும்: கொள்முதல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை விலைக்கு மேல் 40 சதவீதம் கூட்டி "பொருளியல் விலை' (எகனாமிக் பிரைஸ்) என்ற பெயரில் மாநில அரசுக்கு விற்கும்.

இந்தப் பொருளியல் விலையில் மாநில அரசின் பொறுப்பில் உள்ள ரேஷன் கடை, அரிசி – கோதுமையை விற்கும்.

இன்று வழக்கில் உள்ள மானிய விலை என்பது, ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி ரூ. 3; கோதுமை என்றால் ரூ. 2. பொருளாதார விலை என்பது கொள்முதல் விலையுடன் 40 சதம் கூட்டினால் வரக்கூடியது; உதாரணமாக அரிசி விலை கிலோ ரூ. 21 என்றும் கோதுமை கிலோ ரூ. 20 என்றும் கொண்டால், அரிசியோ கோதுமையோ வாங்காதவர்களுக்கு ரூ. 18 ஷ் 35 = ரூ. 630.

ஆதார அட்டையைக் காண்பித்துப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். "இதுதான் உங்கள் பணம் உங்கள் கையில்'.

பொருளாதார விலை என்பது சிக்கன விலையே தவிர நிஜமான அடக்கவிலை அல்ல. நிஜமான அடக்க விலை என்பது கொள்முதல் விலைக்குமேல் 120 சதவீதம் வரை இருக்கும்.

கொள்முதல் விலை, நெல் வடிவில் 1 கிலோ ரூ. 10 என்றால் அதில் 66 சதவீதம் மட்டும் அரிசி.

அரைவைக் கூலி மறுபடியும் மூட்டை கட்டுதல், கொள்முதல் செய்யப்பட்ட இடத்திலிருந்து அரைவை ஆலைக்குச் செல்ல லாரி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி அதன் பின்னர் பண்டகசாலைக்குச் செல்லும் லாரி வாடகை.

பின்னர் பண்டக சாலையிலிருந்து ரேஷன் கடைக்குச் செல்லும் லாரி வாடகை என்று கூட்டிப்பார்த்தால் அரிசி அடக்க விலை ரூ. 30 வரை ஆகும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தால் ரூ. 27 ல  35 = ரூ. 935 வரை வழங்க வேண்டி வரலாம்.

ஆனால், அதுவே நிதிப்பட்டினிச் சட்டம் அடிப்படையில் வழங்கப்படுமானால் சிக்கன விலையையே ரூ. 11 என்று நிர்ணயித்து 8 ல 35 = ரூ. 280 மட்டும் வழங்கப்படலாம்.

இயற்றப்பட்ட சட்டம் யுனீக் அடையாள அட்டையின்படி பணமோ, அரிசியோ தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.

முதல் கட்டமாக இந்தப் பரிசோதனை ஏக தடபுடலுடன் யூனியன் எல்லைப் பிரதேசங்களில் அறிமுகமாகிறது. புதுச்சேரியில் இந்தப் புதுமைத் திட்டம் செயல்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

மக்கள்தொகை குறைவான பிரதேசங்களில் "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் செயல்படுத்தும்போது சிக்கல் இருக்காது என்று மத்திய அரசு நம்பலாம். ஆனால், முழு இந்தியாவிலும் செயல்பட்டால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

2006-லிருந்து 2010-க்கு வரும்போது குறைந்தபட்ச ஆதரவு விலை என்று கூறப்படும் அரசு கொள்முதல் விலை, நெல்லில் 62 சதவீதமும் கோதுமையில் 54 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2010-இல் நிறைவேற்றப்பட்டு "கையில் பணம்' – ஆதார அட்டைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் மேற்படி விலை உயர்வு பயனாளிகளிடம் ரொக்கமாகச் செல்லும்போது அரிசி, கோதுமை விலைகள் தாறுமாறாக ஏறி நுகர்வோர் நொந்து போயிருப்பார்கள்.

"கையில் பணம்' திட்டத்தில் அரசுக் கொள்முதல் நிறுத்தப்பட மாட்டாது. விவசாயிகளுக்குரிய ஆதரவு விலையை வழங்கியே தீர வேண்டும்.

ரிசர்வ் வங்கியிலிருந்து பல லட்சம் கோடிப்பணம் உணவுக் கடன் கணக்கில் பெற்றாக வேண்டும். உணவுக் கார்ப்பரேஷனும் இயங்கவே செய்யும். கொள்முதல் செய்யவும் பணம் வேண்டும். ஆதார அடையாள அட்டைப்படி உணவு மானியமும் வங்கிக் கணக்கில் ரொக்கமாக மாற்றவும் வேண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை கொஞ்சநஞ்சமல்ல. உணவுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமானால் நிதிப் பட்டினியைத் தவிர்க்க முடியாது.

மேலும் நோட்டுகள் அடிக்கப்பட்டுப் பணவீக்கம் நிரந்தரமாவது மட்டுமல்ல. ஜி.டி.பி.யில் அதாவது வளர்ச்சியில் வீழ்ச்சியையும் பணவீக்கத்தில் வளர்ச்சியையும் ஒருங்கே பார்க்கலாம்.

உணவு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகம் என்ற நிலை மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. அரசின் ஏகபோகம் மிகவும் செலவுள்ளது.

இச்செலவைத் தவிர்க்கப் படிப்படியாகத்தான் உணவுக் கட்டுப்பாட்டைத் தளர்ச்சி செய்து தனியார் கொள்முதலை அனுமதிக்க வேண்டும்.

சில மாநிலங்களில் மட்டுமே தனியார் கொள்முதல் உண்டு. தமிழ்நாட்டில் அரசு கொள்முதல் செய்யும்போதுதான் தனியாரும் ஓரளவுக்கு அரசு விலையை ஒட்டி நெல் வாங்குகின்றனர்.

பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களில் கோதுமையில் தனியார் கொள்முதல் அறவே இல்லை.

அரசு கொள்முதல் செய்தாலும் தனியார் கொள்முதல் செய்தாலும் விவசாயிகளுக்கு அடக்கவிலைக்குள்பட்ட ஆதரவு விலை தருவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

படிப்படியாக நெல், கோதுமைக் கொள்முதலை அரசு குறைத்துக்கொண்டு தனியார்வசம் ஒப்படைக்கும்போது சற்றுத் தரமான அரிசி, கோதுமை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உணவு வீணாவதையும் தவிர்க்கலாம்.

அரசு கொள்முதல் நெல், கோதுமை விஷயத்தில் குறையுமானால் பயறு – பருப்பு வகைப் பயிர்களும் புஞ்சைத் தானியப் பயிர்களும், எண்ணெய்வித்துப் பயிர்களும் ஊக்கம்பெற வேண்டும்.

நிலக்கடலை, எள், கடுகு போன்ற எண்ணெய்வித்துப் பயிர்களும் கொண்டக்கடலை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பருப்புவகைப் பயிர்களும் ஊக்கம் பெற்றால் இறக்குமதியைத் தவிர்க்கலாம். இதெல்லாம் நடக்காது.

2014-இல் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற "ஆதார' அடையாள அட்டைப்படி அரிசி வாங்க ரொக்கமும் வழங்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியிடம் உணவுக்கடன் பெற்று உணவுக் கொள்முதலையும் தொடர வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும் இயற்ற வேண்டும். விளைவு, நிதிப் பட்டினிதான்.

நிதிப் பட்டினியை "வால்மார்ட்' தீர்த்து வைக்குமா? ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகளை அச்சிட்டு நிதிப் பட்டினியைப் போக்கி உணவு விலையை உயர்த்தி, ஏழைகளைப் பட்டினி போடுமா? புரியாத புதிர். வாழ்க பாரதம்.

– நன்றி = தினமணி 02/02/2013

தனியார் மயமாகும் போக்குவரத்துத்துறை!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக்கழகத்தில் சில பணிகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருவதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில் கடந்த 67ம் ஆண்டுக்கு முன் அரசு போக்குவரத்து தமிழக அரசின் கீழ் இயங்கி வந்தது. தமிழகத்தில் சென்னையிலும், குமரி மாவட்டத்திலும் தான் அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் சிறந்த பஸ் போக்குவரத்து என்ற பெயர் பெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக தமிழகஅரசு போக்குவரத்து பல்வேறு கழகங்களாக பிரிக்கப்பட்டது.தற்போதைய சூழ்நிலையில் தமிழக அளவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களோடு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு அவர்களுக்கு வாழ்வளிக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக போக்குவரத்து கழகங்கள் உள்ளன.இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் பயணத்தை பொறுத்தவரை 90 சதவீதத்திற்கும் அதிமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் ராணிதோட்டம், ஒன்று, இரண்டு, மூன்று, டெப்போக்களும், திங்கள்சந்தை, குளச்சல், மார்த்தாண்டம், களியாக்கவிளை, கன்னியாகுமரி, திருவட்டார், செட்டிகுளம் குழித்துறை ஆகிய 11 டெப்போக்களும் இயங்கி வருகிறது. இந்த டெப்போக்கள் மூலம் சுமார் 850 பஸ்கள் தினமும் இயக்கபடுகிறது.கடந்த பல ஆண்டு காலமாக டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் பூர்த்தி செய்யபடாத நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் டிரைவர், கண்டக்டர்கள் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 13 வருடங்களாக தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யபடாமல் உள்ளது. ஆனால் பஸ்களின் எண்ணிக்கை மட்டும் கூடி கொண்டு இருக்கிறது. பணிஒய்வு, விருப்பஒய்வு, ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. டெப்போக்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும், உதிரிபாகங்கள் தட்டுபாடு காரணமாகவும், சரிவர இயங்காத நிலை இருந்து வருகிறது.பொதுவாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு டெப்போக்களிலும் சுமார் 75 முதல் 80 வரை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நகர்புறங்களுக்கு 40க்கும் மேற்பட்ட பஸ்களும், கிராமபுற பகுதி சேவைக்களுக்கு 20க்கும் அதிகமான பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு மீதம் உள்ள பஸ்களும் இயக்கபடுவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் இது போன்ற நிலையில் இயக்கபடுகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய டெப்போக்களில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கபடுகின்றன.பெரிய தனியார் பஸ்கள் சேவையில்லாத நிலையில் பொதுமக்கள் இந்த அரசு பஸ்சை நம்பியே உள்ளநிலையில் அந்த பஸ்கள் கண்ணாமூச்சி காட்டும் போது பயணிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.பஸ்களின் எண்ணிக்கை ஏற்ப தேவையான உதிரி பாகங்கள் இல்லாத நிலையில் பஸ்கள் இயக்கபடுவது குறைக்கபடுகிறதோ என்ற சந்தேகமும் பயணிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.இது போன்ற பஸ்களில் பழுதடைந்த மாற்று உதிரிபாகங்களை பயன்படுத்தி பஸ்களை ஒட்ட முயலும் போது, ஏற்கனவே மிகவும் மோசமான உதிரிபாகங்களை பயன்படுத்தும் போது மீண்டும் பழுதடைவது குறிப்பிடத்தக்கது. மேலும் போக்குவரத்து கழக பஸ்கள் விபத்துக்குளாளாகும் போது, விபத்து காப்பீட்டு தொகைக்காக அதிக அளவில் செலவிட வேண்டியது உள்ளதாலும் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது எனவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆசியாவில் சிறந்த கூண்டு கட்டும் பிரிவாக இயங்கி வந்த கூண்டு கட்டும் பிரிவு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் வேதனை அளித்து வருகிறது. மேலும் போக்குவரத்து கழகத்தில் பஸ்களின் சீரான பராமரிப்பிற்கு தேவையான உதிரிபாகங்கள் புதுபிக்கும் பிரிவு, டயர் புதுபித்தல் பிரிவு, கேண்டீன், மற்றும் பணிமனை கழிவறைகள், தொழிற்கூடம், பணிமனை சுத்தம் செய்யும் பணி ஆகியன தனியாருக்கு வழங்கப்பட்டுள்தாக தெரிகிறது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், மற்றும் குறைந்த கல்வி தகுதி உடையோர் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இன்றி பல ஆயிரம் இளைஞர்கள் வாடும் நிலையில், இது போன்ற தனியார் மய கொள்கையால் பெரிதும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிஉள்ளது.இது குறித்து குமரி மாவட்ட பி.எம்.எஸ்., சங்க அமைப்பாளர் பத்மனாபபிள்ளை கூறும் போது;-ஆசியாவில் சிறந்த கூண்டுகட்டும் பிரிவு இங்குதான் செயல்பட்டு வந்தது. தரமான கூண்டு கட்டும் பிரிவு எனவும், நல்ல முறையில் பல ஆண்டுகாலம் உழைக்கும் தன்மை கொண்டதாகவும், பலமாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது கண்டனத்துக்குரியது. மேலும் வேலை வாய்ப்புக்காக காத்து இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பணியை தான் தாரை வார்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயக்கப்படும் சுமார் 850 பஸ்களில் 350க்கும் மேற்பட்ட பஸ்கள் காலாவதியான பஸ்கள் ஆகும். இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை உள்ளது. வேலைவாய்ப்புக்காக காத்து இருப்வர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி கொண்டு வுருகிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்கும் ஒரே நிறுவனமான போக்குவரத்துத்துறையில் தனியார்மயம் ஆகி வருகிறது.சுமார் 900க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை என்ற நிலையில் தற்போது 600 பேர் தான் பணியில் உள்ளனர். எனவே தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கவேண்டும். மேலும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. தொழிலாளர்களை பழிவாங்குதல், உள்நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுத்தல் ஆகிவற்றால் சுமூகமான உறவு இல்லாத நிலையில் இருந்து வருவது வேதனையானது. சில நேரங்களில் சம்பந்தப்பட்ட துறையினர் வருமானம் இல்லாத ரூட்களில் பஸ்களை நிறுத்திவிடும் நிலையும் உள்ளது. இதனை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தனியார்நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் செயலை கைவிட வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்யும் வகையில் கடந்த காலத்தை போன்று கூண்டுகட்டும் பிரிவை துறை சார்பில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அணைவரின் விருப்பமாகும்.

 

 

 

 

Leave a Comment